பயங்கரவாதத்தின் விதைகளை நாங்கள் விதைத்தோம்: பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி வேதனை
|பாகிஸ்தான் மசூதி தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியான நிலையில், பயங்கரவாதத்தின் விதைகளை நாங்கள் விதைத்தோம் என அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி கூறியுள்ளார்.
லாகூர்,
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அந்த பகுதியில் உள்ள போலீசார், ராணுவ வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இந்த மசூதியில்தான் தொழுகை நடத்துவார்கள். எனவே 4 அடுக்கு பாதுகாப்பை கடந்துதான் இந்த மசூதிக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மதியம் மசூதியில் வழக்கம் போல் தொழுகை நடந்து கொண்டிருந்தது. போலீசார், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு மத்தியில் இருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார். இந்த தாக்குதலில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டுகள் வெடித்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த பலர் உயிரிழந்தனர்.
இந்த பலி எண்ணிக்கை இன்று 100 ஆக உயர்ந்து உள்ளது. 170 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மசூதியில் 300 முதல் 400 போலீசார் வரை தொழுகைக்காக வந்துள்ளனர். குண்டுவெடிப்பில் மேற்கூரை பகுதி மற்றும் ஒரு பக்க சுவர் வெடித்து சிதறி உள்ளது. அவை தொழுகையில் இருந்தவர்கள் மீது விழுந்துள்ளன.
இதுபற்றி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் பேசும்போது, நான் நீண்ட நேரம் பேச போவதில்லை. தொடக்கத்தில் இருந்து நாங்கள் பயங்கரவாதத்திற்கான விதைகளை விதைத்தோம் என வேதனை தெரிவித்து உள்ளார்.
இந்த தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்திய நபர், இறைவணக்கத்தின்போது, தொழுகை நடைபெறும் பகுதியில் முன்னால் நின்று கொண்டிருந்து உள்ளார். இந்தியா அல்லது இஸ்ரேல் நாடுகளில் கூட இறைவனை வழிபடும்போது யாரும் கொல்லப்படுவதில்லை. ஆனால், அது பாகிஸ்தானில் நடந்து உள்ளது என்று கூறினார்.
இந்த பெஷாவர் மசூதி குண்டுவெடிப்புக்கு யார் பொறுப்பானவர்கள் என்றும் ஆசிப் கேள்வி எழுப்பியுள்ளார் என டான் பத்திரிகை தெரிவித்து உள்ளது.
ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தேவை உள்ளது. அதன்பின்னரே, நாம் அதற்கு எதிராக போராட முடியும்
எந்தவொரு மதம் அல்லது வகுப்பினருக்கு இடையே பயங்கரவாதம், வேற்றுமைப்படுத்துவது இல்லை. விலைமதிப்பற்ற உயிர்களை பலி கொள்ள மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.