'ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை' - அமெரிக்கா
|ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
வங்காளதேசத்தில் ஏற்பட்ட தொடர் வன்முறையை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு தப்பினார். இதையடுத்து வங்காளதேச ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார்.
இதனிடையே, வங்காளதேசத்தின் செயின்ட் மார்ட்டின் தீவில் ஒரு ராணுவ தளத்தை நிறுவ அமெரிக்கா விரும்புவதாகவும், தற்போது வங்காளதேசத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவே காரணம் என்றும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் ஷேக் ஹசினா அமெரிக்காவை குற்றம்சாட்டி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என அவரது மகன் சஜீப் வாசித் ஜாய் கூறியிருந்தார்.
இந்த நிலையில், 'ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை' என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரீன் ஜீன்-பியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வங்காளதேசத்தில் நடந்த நிகழ்வுகளில் அமெரிக்க அரசாங்கத்திற்கு தொடர்பு உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அதில் எந்த உண்மையும் இல்லை. வங்காளதேச அரசாங்கத்தின் எதிர்காலத்தை வங்காளதேச மக்களே தீர்மானிக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். அதுவே எங்கள் நிலைப்பாடு" என்று தெரிவித்தார்.