இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி: உலக சுகாதார அமைப்பு தகவல்
|இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,
கொரோனா வைரஸ் தொற்று உருவாகி 2½ ஆண்டுகளை கடந்த பின்னரும் அந்த கொடிய வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பலநாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் கூறுகையில், "2½ ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கொரோனா மரணங்களைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து கருவிகளையும் வைத்திருக்கும் போதுகூட இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றால், நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்கிறோம் என்று சொல்ல முடியாது" என்றார்.
மேலும் அவர், "அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு அனைத்து அரசாங்கங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" எனவும் கூறினார்.