< Back
உலக செய்திகள்
டர்பனா..? நாங்க இதையெல்லாம் அணிய மாட்டோம்: அமெரிக்காவில் சீக்கியரை தாக்கியவர் கைது
உலக செய்திகள்

டர்பனா..? நாங்க இதையெல்லாம் அணிய மாட்டோம்: அமெரிக்காவில் சீக்கியரை தாக்கியவர் கைது

தினத்தந்தி
|
21 Oct 2023 4:49 PM IST

தலைப்பாகை அணிந்த சீக்கிய இளைஞர் ஒருவரை அமெரிக்க வாலிபர் வம்புக்கு இழுத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிரான இன பாகுபாடு அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் சீக்கியர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நடக்கின்றன. சமீபத்தில் நியூ ஜெர்சி மாநிலம், ஹோபோகன் நகரின் சீக்கிய மேயர் ரவீந்தர் எஸ்.பல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தலைப்பாகை அணிந்த சீக்கிய இளைஞர் ஒருவரை அமெரிக்க வாலிபர் ஒருவர் வம்புக்கு இழுத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

19 வயது நிரம்பிய சீக்கிய இளைஞர், நியூயார்க் நகரில் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, அமெரிக்க வாலிபர் கிறிஸ்டோபர் பிலிப்பெக்ஸ் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். சீக்கிய இளைஞர் அணிந்திருந்த தலைப்பாகையை (டர்பன்) சுட்டிக்காட்டி, 'நாங்கள் இந்த நாட்டில் இதை அணிவதில்லை' என்று கூறி வம்பிழுத்துள்ளார். மேலும் மாஸ்க்கை கழற்றும்படி கூறி அவரது முகம், முதுகு மற்றும் தலையின் பின்புறத்தில் தாக்கி உள்ளார். டர்பனை அகற்றவும் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த சீக்கிய இளைஞர், பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடியிருக்கிறார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து, வெறுப்பு குற்றம் தொடர்பான பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், அந்த நபர் ஏற்கனவே சில குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர் என தெரியவந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 2021ல் பரோலில் வந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்