கொரோனா அலை இன்னும் ஓயவில்லை, அதிகரிக்கும் இறப்பு விகிதம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
|கொரோனாவால் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என உருமாற்றம் அடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒமைக்ரான் தொற்றின் வருகையால் உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் பல மாதங்களுக்கு பிறகு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35% அதிகரித்துள்ளது.
கொரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கொரோனாவுடன் வாழும்போது நாம் இதுவரை கடைபிடித்துவந்த முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கூட்டங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் இதுவரை 59 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டு 9.3 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அடுத்தபடியாக இந்தியாவில் தான் 4.4 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தயவு செய்து நீங்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இரண்டு தவணை செலுத்திவிட்டிருந்தால் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நாம் கைவிடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.