அனைத்து மதங்களையும் மதித்தால் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம் - ஐ.நா
|அனைத்து மதங்களையும் மதித்து நடந்தால் வெவ்வேறு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் அமைதியாக வாழலாம் என ஐ.நா., தெரிவித்துள்ளது.
நியூயார்க்,
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்பவரை, ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை செய்து, அதை 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட, 'தனியார் செய்தி நிறுவனத்தின்' இணை நிறுவனர் முகமது சுபைர் கைது குறித்தும், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:-
உலகம் முழுதும், அனைத்து மதங்களையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம். இதனால், அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழலாம். அத்தகைய சமூகம் உருவாகும் என, ஐ.நா., நம்புகிறது.
கருத்து தெரிவிப்பது மக்களின் அடிப்படை உரிமை. தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிப்பது, பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமை. மக்கள் பரஸ்பரம் பிற மதத்தினரையும், சமூகத்தினரையும் மதிக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும், மிக முக்கியமானவை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.