விண்வெளியில் கருந்துளையின் ஒளி எதிரொலிகளை ஒலி அலைகளாக மாற்றிய நாசா- வைரல் வீடியோ
|கருந்துளை பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அவ்வப்போது புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.
வாஷிங்டன்,
விண்வெளி ஆராய்ச்சியில் அறிவியலாளர்களுக்கு இன்று வரை மர்மமாக இருக்கும் கருந்துளை (Black Hole) பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அவ்வப்போது புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.
நமது பால்வெளி மண்டலத்தில் நிறைய கருந்துளைகள் உள்ளன. பால்வெளி மண்டலத்தில் உள்ள 'பிளாக் ஹோல்' எனப்படும் மிகப் பெரிய கருந்துளையின் படம் கடந்த மே மாதம் முதல் முறையாக வெளியிடப்பட்டது.
அதிலிருந்து அபரிவிதமான ஆற்றல் வெளிவரும். குறிப்பாக கருந்துளையின் ஈர்ப்பு விசை மிக மிகத் தீவிரமானது. இந்த கருந்துளைகளில் இருந்து ஒளி உட்பட எதுவும் வெளியேற முடியாது. இந்த கருந்துளை குறித்து உலகெங்கும் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய முயற்சியாக நாசா, கருந்துளையைச் சுற்றியுள்ள ஒளி எதிரொலிகளை ஒலி (சத்தம்) அலைகளாக மாற்றியுள்ளது. உண்மையில் கருந்துளையால் வெளியிடப்பட்ட அலைகளை மனிதர்களால் கேட்க முடியாது. எனவே, புதிய சோனிபிகேஷன் முறைகளைப் பயன்படுத்தி, நாம் கேட்கக்கூடிய சிற்றலைகளிலிருந்து ஒலிகளை உருவாக்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
இதற்காக நாசா அதன் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தால் பதிவு செய்யப்பட்ட வானியல் தரவுகளைப் பயன்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், கருந்துளையில் இருந்து வெளிப்படும் சத்தத்தை கேட்கமுடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.