< Back
உலக செய்திகள்
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் குறைத்துக்கொள்ள வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்
உலக செய்திகள்

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் குறைத்துக்கொள்ள வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

தினத்தந்தி
|
16 Dec 2023 3:18 AM IST

ஹமாஸ் அமைப்பினர் இறங்கி வந்தால் போர் இப்போதே முடிவுக்கு வந்துவிடும்.

வாஷிங்டன்,

காசாவில் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளின் தீவிரத்தை இஸ்ரேல் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. ஹமாஸை ஒழிப்பதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளித்தாலும் காசாவில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பு 19 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கப் சல்லிவன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, காசாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளின் தீவிரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நெதன்யாகுவிடம் சல்லிவன் வலியுறுத்தினார். அதற்காக, தீவிரமான தாக்குதல்களுக்குப் பதிலாக இலக்குகளை மட்டும் குறிவைத்து 'துல்லியமான' தாக்குதல் நடத்தும் உத்தியைப் பயன்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இனி வரும் நாட்களில் அந்த உத்தி அமல்படுத்தப்படலாம். ஆனால் அது எப்போது அமல்படுத்தப்படும் என்று இப்போதே கூற முடியாது. ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை தொடர்ந்து மதிக்கிறோம்.

இருந்தாலும், பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும். இது குறித்து விவாதிப்பதற்காகத்தான் சல்லிவன் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவர் இஸ்ரேலுக்கு நிபந்தனைகள் விதிக்கப்போவதில்லை. இருந்தாலும், காஸா தாக்குதல் குறித்த கடினமான கேள்விகளை அவர் முன் வைப்பார்.

இந்தப் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றே விரும்புகிறோம். ஹமாஸ் அமைப்பினர் இறங்கி வந்தால் போர் இப்போதே முடிவுக்கு வந்துவிடும். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை என்றார் ஜான் கிர்பி.

மேலும் செய்திகள்