சீனாவுடன் 2 ஆண்டுகளில் போர்... வீரர்களே தயாராக இருங்கள்: அமெரிக்க விமான படை அதிகாரி எச்சரிக்கை
|சீனாவுடன் வரும் 2025-ம் ஆண்டில் போர் ஏற்படும் என அமெரிக்க விமான படை அதிகாரி எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்.
அமெரிக்க விமான படையில் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட அதிகாரியாக இருப்பவர் ஜெனரல் மைக் மினிஹேன். விமான படை இயக்க தளபதியாக உள்ள அவர் தனது தலைமைக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாம் 2025-ம் ஆண்டில் போரிடுவோம் என என்னுடைய வீரம் கூறுகிறது.
அதனால், வீரர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். எனினும், நான் கூறுவது தவறாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறேன் என அவர் தெரிவித்து உள்ளார். பிப்ரவரி 1 தேதியிட்ட அந்த கடிதம் நேற்று முன்தினமே அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள பென்டகன் தரப்பில் அதிகாரிகள் கூறும்போது, சீனாவின் மீது எங்களது துறை ரீதியிலான கருத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த விமர்சனங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், சீனாவின் நடவடிக்கைகள் போருக்கான சூழலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என்பதுபோல் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை கூறுகிறது.
அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளரான லாய்டு ஆஸ்டின் இந்த மாத தொடக்கத்தில் கூறும்போது, தைவான் ஜலசந்தி பகுதியில், சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பது சந்தேகம் கிளப்புகிறது. தைவான் தீவு மீது சீனா படையெடுப்பிற்கான அறிகுறியும் தென்படுகிறது என சந்தேகம் எழுப்பினார்.
தைவான் மீது சமீப ஆண்டுகளாக தூதரக, ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை உண்டு பண்ணும் வேலையில் சீனா இறங்கி உள்ளது. சீன ஆட்சியை ஏற்கும்படியான நெருக்கடியை, தைவானுக்கு கொடுத்து வருகிறது.
ஆனால், அமைதியை விரும்புகிறோம் என கூறி வரும் தைவான் அரசு, தாக்குதல் தொடுக்கப்பட்டால் தற்காப்புக்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்றும் கூறியுள்ளது. தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா கடந்த காலத்தில் வெளிப்படையாக அறிவித்தது.
அதற்கேற்ப, அந்நாட்டின் முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்நாட்டில் வைத்து, தைவானின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவரது பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அமெரிக்க விமான படையின் பிரிகேடியர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் கூறும்போது, எங்களது கூட்டணி நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும் மற்றும் அமைதியான, சுதந்திர மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பகுதியை பாதுகாப்பதிலேயே எங்கள் கவனம் உள்ளது என கூறியுள்ளார்.