போர் பதற்றம்; குடிமக்களுக்கான உதவி மையங்களை அமைத்த சர்வதேச நாடுகள்
|இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய மோதலை அடுத்து, சர்வதேச நாடுகள் தங்கள் குடிமக்களை பாதுகாக்க டெல் அவிவ் விமான நிலையத்தில் உதவி மையங்களை அமைத்து உள்ளன.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், பொதுமக்களை தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் கூறியுள்ளது. தொடர்ந்து, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.
இதனால், போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள சூழலில், அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு குடிமக்களை இஸ்ரேலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தியர்கள் தனி விமானத்தில் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்கா, டென்மார்க், பின்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதன்படி, அவர்கள் டெல் அவிவ் விமான நிலையத்தில் பொதுமக்கள் வெளியேற உதவி செய்யும் வகையில், குடிமக்களுக்கான உதவி மையங்களை அமைத்து உள்ளன. அவற்றின் உதவியுடன் இஸ்ரேலில் இருந்து மக்கள் வெளியேற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.