போர் முடிவுக்கு வரவேண்டும்; புதினிடம் வலியுறுத்திய தென்ஆப்பிரிக்க அதிபர்
|உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டும் என புதினை நேரில் சந்தித்து பேசிய தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா வலியுறுத்தி கூறியுள்ளார்.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரிலான நடவடிக்கையை தென்ஆப்பிரிக்க அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா நேற்று சென்று உள்ளார். அவருடன், ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் 7 பேர் அடங்கிய குழுவினர் உடன் சென்றுள்ளனர்.
இந்த பயணத்தில் அவர், ரஷிய அதிபர் புதினை கான்ஸ்டன்டிநோவ்ஸ்கை அரண்மனையில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ராமபோசா கூறும்போது, நாங்கள் ஒரு தெளிவான செய்தியுடன் வந்திருக்கிறோம். அது, இந்த போரானது முடிவுக்கு வரவேண்டும்.
ஆப்பிரிக்க கண்டத்தில் இந்த போரால் எதிர்மறை தாக்கம் ஏற்பட்டு உள்ளது. உண்மையில், உலகம் முழுவதும் பல நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.
இது தவிர்த்து, நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள கூடிய, ஆப்பிரிக்காவின் அமைதி திட்ட தொடக்க நடவடிக்கைக்கான, 10 அம்சங்களையும் அவர் வெளியிட்டார்.
ரஷியாவின் தாக்குதலை முறியடிக்கும் வகையில், கடந்த வாரம் உக்ரைனின் படைகள் பெரிய அளவில் போரில் ஈடுபட தொடங்கின. இந்த சூழலில், கடந்த 16-ந்தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை தென்ஆப்பிரிக்க அதிபர் மேற்கொண்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து ரஷிய அதிபருடனான இந்த சந்திப்பு நடந்தது. எனினும், உணவு நெருக்கடியானது மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளால் விளைந்தவை என்றும் உக்ரைன் மீது மேற்கொண்டு உள்ள ரஷியாவின் ராணுவ நடவடிக்கையால் அல்ல என்றும் புதின் கூறியுள்ளார்.