உக்ரைனுக்கு இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் உதவுவார் - அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை!
|உக்ரைனின் உறுதியான நட்பு நாடாக இங்கிலாந்து இருந்து வருகிறது.
கீவ்,
உக்ரைனின் உறுதியான நட்பு நாடாக இங்கிலாந்து இருந்து வருகிறது.உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்கள், நிதி மற்றும் பயிற்சி போன்ற உதவிகளை இங்கிலாந்து வழங்கியுள்ளது.
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நெருங்கிய நட்புறவை கடைபிடித்தார். போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு இதுவரை 3 முறை நேரடியாக சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சனுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். புதிய தலைவர் (பிரதமர்) பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எதிர்பார்த்தது போல, லிஸ் டிரஸ் தேர்வு ஆனார்.
இந்நிலையில், ரஷியாவை தடுக்க உக்ரைனுக்கு இங்கிலாந்தின் புதிய பிரதமர்(லிஸ் டிரஸ்) உதவுவார் என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று பேசியபோது, ரஷியாவின் அனைத்து அழிவு முயற்சிகளையும் முறியடிக்கவும், எங்கள் மக்களை பாதுகாக்கவும் இங்கிலாந்து மற்றும் உக்ரைன் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும்.
உக்ரைனில் உள்ள நாங்கள் அவரை(லிஸ் டிரஸ்) நன்கு அறிவோம். அவர் எப்போதும் ஐரோப்பிய அரசியலின் முக்கியமானவராக இருக்கிறார். டிரஸ் உடன் ஒத்துழைப்பை தொடங்க எதிர்நோக்கியுள்ளேன் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.