ரஷ்யாவின் அதிபராக 5-வது முறை விளாடிமிர் புதின் பதவியேற்பு
|தேர்தலில் வெற்றி பெற்று ரஷியாவின் அதிபராக 5-வது முறை புதின் பதவியேற்றுக் கொண்டார்.
மாஸ்கோ,
ரஷியாவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் களமிறங்கினார். வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை.
கிரெம்ளின் ஆதரவு வேட்பாளர்கள் 3 பேர் மட்டுமே புதினுக்கு எதிராக போட்டியிட அனுமதி கிடைத்தது. அவர்களும், உக்ரைன் மீது புதின் அரசாங்கம் நடத்தி வரும் போருக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. இதனால் புதின் வெற்றி பெறுவது நிச்சயம் என்ற நிலை இருந்தது.
இதையடுத்து தேர்தலில் பதிவான எண்ணப்பட்ட நிலையில், 87.29 சதவீத வாக்குகள் பெற்று புதின் மீண்டும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 18-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதினின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதன்படி ரஷியாவின் அதிபராக 5-வது முறை புதின் பதவியேற்றுக் கொண்டார். ரஷியாவில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.