24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரிய தலைவரை சந்தித்த புதின்.. சிவப்பு கம்பள வரவேற்பு
|உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர், முன்னெப்போதையும் விட புதின்-கிம் இடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தி உள்ளது.
மாஸ்கோ:
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று வடகொரியாவுக்கு சென்றார். கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில், வடகொரியாவுக்கு வரும்படி புதினை வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அழைத்திருந்த நிலையில், புதின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலையில் வட கொரியா தலைநகர் பியாங்யாங் சென்றடைந்த புதினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார் வட கொரிய தலைவர் கிம். அதன்பின்னர் இரண்டு தலைவர்களும் ஒரே காரில் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். அவர்கள் சென்ற கார், ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த காரை, கடந்த ஆண்டு கிம்முக்கு புதின் வழங்கினார்.
கடைசியாக, 2000-ம் ஆண்டு ஜூலையில், வடகொரியாவுக்கு புதின் பயணம் மேற்கொண்டார். 24 ஆண்டுகளுக்கு பிறகு ரஷிய அதிபரும், வட கொரிய தலைவரும் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது மற்றும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
உக்ரைன் மீது நடத்தப்படும் போரில் வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டிய தேவை ரஷியாவுக்கு உள்ளது. உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர், முன்னெப்போதையும் விட இரு தலைவர்களிடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையிலும் புதினின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.