< Back
உலக செய்திகள்
ஜி20 மாநாட்டில் பங்கேற்க அதிபர் புதின் இந்தியா வரமாட்டார் - ரஷிய அதிபர் மாளிகை தகவல்
உலக செய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க அதிபர் புதின் இந்தியா வரமாட்டார் - ரஷிய அதிபர் மாளிகை தகவல்

தினத்தந்தி
|
25 Aug 2023 5:43 PM IST

ஜி20 மாநாட்டில் பங்கேற்க அதிபர் புதின் இந்தியா வரமாட்டார் என ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்ளின் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,

ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. அதன்படி, ஜி20 நாடுகளின் பல்வேறு துறை சார்ந்த மந்திரிகள் கூட்டம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர், சென்னை என பல்வேறு நகரங்களில் ஜி20 நாடுகளின் மந்திரிகள் மட்டத்திலான கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஜி20 நாடுகளின் தலைவர்கள் மட்டத்திலான உச்சிமாநாடு வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வரமாட்டார் என ரஷிய அதிபர் மாளிகை கிரிம்ளின் தெரிவித்துள்ளது. அதேவேளை உச்சிமாநாட்டில் புதின் காணொலி வாயிலாக அல்லது பிற வழிகளில் பங்கேற்பது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் புதின் நேரடியாக பங்கேற்கவில்லை. மாறாக மாநாட்டில் புதின் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிக்ஸ் மாநாட்டை போன்றே ஜி20 மாநாட்டிலும் புதின் காணொலி வாயிலாக பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்