இங்கிலாந்தில் விசா முறைகேடு; பெண் உள்பட 12 இந்தியர்கள் கைது
|நாடு முழுவதும் குடியுரிமை அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம் என சட்டவிரோத குடியுரிமை தடுப்புக்கான இங்கிலாந்து மந்திரி கூறியுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் சில பகுதிகளில் சட்டவிரோத பணிகள் நடக்கிறது என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, மேற்கு மிட்லேண்ட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இங்கிலாந்தின் குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் ஆலை ஒன்றில் நடத்திய சோதனையில் 7 ஆண்களை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என இங்கிலாந்து உள்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று அருகேயுள்ள கேக் தயாரிக்கும் ஆலை ஒன்றில் நடந்த சோதனையின்போது, 4 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு வீட்டில் நடந்த சோதனையில் பெண் ஒருவரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் ஆவர்.
விசா நடைமுறை விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து சோதனையில் ஈடுபட அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இவர்களில் 4 பேரை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்ற அல்லது இந்தியாவுக்கு நாடு கடத்துவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற 8 பேரும் உள்துறை அலுவலகத்திற்கு இந்த தகவலை பற்றி அடிக்கடி தெரிவித்து வந்துள்ளனர். அதனால், அவர்கள் ஜாமீனில் விடப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் குடியுரிமை அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம் என்பதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை உள்ளது என்று சட்டவிரோத குடியுரிமை தடுப்புக்கான இங்கிலாந்து மந்திரி மைக்கேல் டாம்லின்சன் கூறியுள்ளார்.
விதிமீறும் உரிமையாளர்களுக்கு அபராதம் அதிகரிக்கப்படும். வசிப்பதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ உரிமை இல்லாத பணியாளர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றவோ, செயல்படவோ தயங்கவேமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.