சிலி நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பு
|போராட்டத்தின் போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சாண்டியாகோ,
தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான சிலியில், உணவு பொருட்களுக்கான மானியம் மற்றும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை அந்நாட்டின் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அந்நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்காததால், மாணவர் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் இருதரப்பினருக்கும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால், அங்கு கலவரம் மூண்டது. காவலர்களின் வாகனங்களை மாணவர்கள் அடித்து உடைத்தனர். இதனை தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை காவல்துறையினர் கலைத்தனர்.
தீ வைக்கப்பட்ட ஒரு பேருந்தை அணைக்க, காவல்துறையினர் தண்ணீர் பீரங்கி டிரக்குகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சம்பவங்கள் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.