< Back
உலக செய்திகள்
எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக சேவை செய்தவர் விஜயகாந்த் - செந்தில் தொண்டமான் இரங்கல்
உலக செய்திகள்

எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக சேவை செய்தவர் விஜயகாந்த் - செந்தில் தொண்டமான் இரங்கல்

தினத்தந்தி
|
28 Dec 2023 11:46 PM IST

பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர் விஜயகாந்த் என்று இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

கொழும்பு,

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். விஜயகாந்த் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர். விஜயகாந்துடன் பல முறை ஏற்பட்ட சந்திப்பின் போது அவருடைய எண்ணங்களிலும் செயல்களின் ஊடாகவும் அவர் ஒரு போற்றப்பட வேண்டிய தலைவர் என்பதை நான் அறிந்தேன்.

எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக உடனுக்குடன் சேவையை செய்யும் அரசியல் தலைவர். மேலும் இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்டவர். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளார். பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர். இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கு ஓர் பேரிழப்பாகும்.

நடிகர் விஜயகாந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்