< Back
உலக செய்திகள்
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு மத்தியில் வியட்நாம் அதிபர் நுயென் சுவான் பூக் திடீர் ராஜினாமா

Image Courtacy: AFP

உலக செய்திகள்

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு மத்தியில் வியட்நாம் அதிபர் நுயென் சுவான் பூக் திடீர் ராஜினாமா

தினத்தந்தி
|
19 Jan 2023 3:39 AM IST

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு மத்தியில் வியட்நாம் அதிபர் நுயென் சுவான் பூக் திடீர் ராஜினாமா செய்தார்.

ஹனோய்,

கம்யூனிச நாடான வியட்நாமில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வந்தவர் நுயென் சுவான் பூக். அதற்கு முன் 2016 முதல் 2021 வரை அந்த நாட்டின் பிரதமராக அவர் இருந்தார். அப்படி அவர் பிரதமராக இருந்தபோது, அவருக்கு கீழ் இருந்த மூத்த மந்திரிகள் பலரும் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்ச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களில் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இதைதொடர்ந்து அந்த நாட்டின் 4 அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் நுயென் பு டிரோங் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை தொடங்கினார். அதன்படி மூத்த மந்திரிகள், தூதரக அதிகாரிகள் உள்பட நூற்றுக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் மீது ஊழல் விசாரணை தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டில் அந்த நாட்டின் துணைப்பிரதமர்கள் 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நுயென் சுவான் பூக்கின் அரசிலும் துணைப்பிரதமர்களாக இருந்தனர்.

எனவே இந்த விவகாரத்தில் அதிபர் நுயென் சுவான் பூக்கின் பதவியும் பறிக்கப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் நுயென் பு டிரோங் கூடுதல் பொறுப்பாக அதிபர் பதவியையும் ஏற்பார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்