அமெரிக்காவில் சாலையில் நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை.. பகீர் வீடியோ
|பட்டப்பகலில் நடந்த கொலை தொடர்பான வீடியோவை பார்த்த ஸ்பேஸ்எக்ஸ் சி.இ.ஓ. எலான் மஸ்க், இது பயங்கரமானது என குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் 64 வயது நிரம்பிய ஸ்டீவன் ஆண்டர்சன் என்பவர், தபால் எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த கார் அவர் மீது திடீரென மோதியது. பின்னர் அதே கார் பின்னோக்கி வந்து மீண்டும் அவர் மீது ஏறி இறங்கியது. இவ்வாறு இரண்டு முறை காரை ஏற்றிய நபர், காரில் இருந்து இறங்கி வந்து கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டீவன் ஆண்டர்சன் உயிரிழந்துள்ளார். பட்டப்பகலில் நடந்த கொலை அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 3-ம் தேதி நிகழ்ந்த இந்த படுகொலை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ கிளிப் வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஸ்டீவன் மீது காரை ஏற்றி கொலை செய்தது காரோன் பிஷ்ஷர் (வயது 20) என்ற திருநங்கை என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த ஸ்பேஸ்எக்ஸ் சி.இ.ஓ. எலான் மஸ்க், இது பயங்கரமானது என குறிப்பிட்டுள்ளார்.