< Back
உலக செய்திகள்
அடுத்த ஆண்டு முதல் வெனிஸ் நகரில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம்
உலக செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் வெனிஸ் நகரில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம்

தினத்தந்தி
|
2 July 2022 6:01 PM GMT

அதிகப்படியான சுற்றுலாவை சமாளிக்கும் முயற்சியாக அடுத்த ஆண்டு (2023) ஜனவரி முதல் வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க வெனிஸ் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வெனிஸ்,

இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெனிஸ் நகரம், நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது.

பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் கலாசாரம் கொண்ட நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வெனிஸ் நகரம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெனிசூலா வந்து செல்கின்றனர். இந்த சூழலில் சமீபத்திய ஆண்டுகளில் வெனிஸ் நகரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவது அந்த நகருக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது.

இந்த நிலையில் அதிகப்படியான சுற்றுலாவை சமாளிக்கும் முயற்சியாக அடுத்த ஆண்டு (2023) ஜனவரி முதல் வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க வெனிஸ் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நுழைவு கட்டணம் 3 யூரோவில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.240) இருந்து 10 யூரோ (சுமார் ரூ.820) வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் துல்லியமாக நிர்ணயிக்கப்படாது எனவும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், சுற்றுலாப் பயணி 300 யூரோ (சுமார் ரூ. 24,700) அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் மாற்றுத்திறனாளிகள், உடல்நலக் காரணங்களுக்காக அல்லது உறவினர்களைப் பார்க்க நகரத்துக்கு வருபவர்கள் மற்றும் விளையாட்டு அல்லது கலாசார நிகழ்வில் கலந்து கொள்ள வருபவர்கள் மற்றும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்