அமெரிக்கா: காட்டுத்தீயில் 3,600 ஏக்கர் நிலம் நாசம்; 1,200 பேர் வெளியேற்றம்
|அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயானது, பிரமிட் லேக் பகுதியை நோக்கி தென்கிழக்காக நகர்ந்து செல்கிறது.
கலிபோர்னியா,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி பகுதியில், கோர்மன் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை காட்டுத்தீ ஏற்பட்டது.
இது அடுத்தடுத்து பல பகுதிகளுக்கும் பரவியது. தீயில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமடைந்தன. இதன்படி, 3,600 ஏக்கர் (5.6 சதுர மைல்கள்) நிலங்கள் தீயில் எரிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, கோர்மன் பகுதிக்கு உட்பட்ட ஹங்ரி வேலி பகுதியில் இருந்து 1,200 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த காட்டுத்தீயானது, பிரமிட் லேக் பகுதியை நோக்கி தென்கிழக்காக நகர்ந்து செல்கிறது. தீயை அணைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
ஞாயிற்று கிழமை மாலை வரை 2 சதவீதம் அளவுக்கே காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனினும், இதனால் யாருக்கும் காயம் ஏற்பட்ட தகவல் எதுவும் வெளிவரவில்லை. காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
பலத்த வேகத்துடன் வீசி வரும் காற்றால், விமானத்தில் இருந்தபடி நீரை ஊற்றி தீயை அணைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. தீயை அணைப்பது சவாலாகவும் உள்ளது என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த வருடத்தில் ஏற்பட்ட மிக பெரிய காட்டுத்தீ இதுவாகும்.