< Back
உலக செய்திகள்
அமெரிக்கா: சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி ஒருவர் பலி
உலக செய்திகள்

அமெரிக்கா: சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி ஒருவர் பலி

தினத்தந்தி
|
21 July 2024 1:57 PM IST

அமெரிக்காவில் ஒற்றை இயந்திரம் கொண்ட செஸ்னா 208பி என்ற விமானம், ஸ்கை டைவிங் பயிற்சியாளர்களை விடுவித்து விட்டு, திரும்பியபோது விபத்தில் சிக்கியது.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நையாகரா கவுன்டி பகுதியில், ஸ்கை டைவிங் எனப்படும் வான்வெளியில் சாகசத்தில் ஈடுபடும் பயிற்சி பெறுபவர்களை சுமந்து கொண்டு சிறிய ரக விமானம் ஒன்று சென்றது.

ஒற்றை இயந்திரம் கொண்ட செஸ்னா 208பி என்ற அந்த விமானம், பயிற்சியாளர்கள் அனைவரையும் விடுவித்து விட்டு, மீண்டும் தரைக்கு திரும்பியது.

அப்போது, யங்ஸ்டவுன் பகுதியருகே லேக் சாலையருகே அந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில், விமானத்தில் பயணித்த விமானி பலியானார். எனினும், விபத்துக்கு முன் விமானத்தில் எத்தனை பயிற்சியாளர்கள் இருந்தனர் என்ற விவரம் தெளிவாக தெரிய வரவில்லை என்று நையாகரா கவுன்டியின் ஷெரீப் மைக்கேல் பிலிசெட்டி கூறியுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. விமானம், விமானி மற்றும் காலநிலை என 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெறும்.

ஸ்கை டைவிங் என்பது விமானத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, அதில் இருந்து கீழே குதித்து பின்னர் தரைக்கு வருவதற்கு முன் பாராசூட் உதவியுடன் பாதுகாப்பாக தரையில் இறங்கும் சாகச விளையாட்டு ஆகும். இதற்கான பயிற்சியில் ஈடுபடுபவர்களின் வசதிக்காக, அவர்களுக்கு பயிற்சி அளிக்க என பல மையங்கள் அந்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்