அமெரிக்கா: தீ விபத்தில் சிக்கி இந்திய இளைஞர் பலி
|அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கடந்த 2023-ம் ஆண்டில் 267 தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹார்லெம் பகுதியில் செயின்ட் நிகோலஸ் பிளேஸ் என்ற குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில், திடீரென லித்தியம் பேட்டரி ஒன்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. கட்டிடம் முழுவதும் தீப்பற்றி பரவியது.
இதனால், அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பியோடினர். இதில், 17 பேர் வரை காயமடைந்து உள்ளனர். எனினும், பாசில் கான் (வயது 27) என்ற இந்திய இளைஞர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.
இதனை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளது.
இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதுபற்றி காவல் ஆய்வாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகர அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டில் 267 தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. 150 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. 18 பேர் உயிரிழந்து உள்ளனர் என நியூயார்க் தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. நடப்பு ஆண்டில் 24 தீயணைப்பு சம்பவங்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.