அமெரிக்காவில் ஒரு மாதத்தில் பண கையிருப்பு தீர்ந்து விடும்: எல்லன் எச்சரிக்கை
|அமெரிக்காவில் ஒரு மாதத்தில் பண கையிருப்பு தீர்ந்து,செலவுகளை எதிர்கொள்ள இயலாத சூழல் ஏற்படும் என அந்நாட்டு கஜானா மந்திரியான எல்லன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கஜானா மந்திரியாக இருக்கும் ஜேனட் எல்லன் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தின் நடவடிக்கையின்றி, அரசின் அனைத்து வித செலவின கோரிக்கைகளையும் வருகிற ஜூன் 1-ந்தேதிக்கு பின்னர் நிறைவேற்றுவது என்பது முடியாத ஒன்றாகி விடும் என தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே, ஜனநாயக கட்சிகள் மற்றும் குடியரசு கட்சிகள் இடையே நீண்டகால மோதல் காணப்படுகிற நிலையில், மந்திரி எல்லனின் இந்த மதிப்பீட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா இந்த நெருக்கடியை சந்திக்க கூடிய சூழலில், உலகளாவிய பொருளாதாரம் பாதிக்கப்பட கூடும் என்ற ஆபத்தும் உள்ளது.
இதனை தொடர்ந்து அதிபர் ஜோ பைடன், முக்கிய தலைவர்கள் 4 பேரை அடுத்த வாரம் வெள்ளை மாளிகைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதனால், ஜெருசலேம் நகரில் தூதரக அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குடியரசு கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை வருகிற 9-ந்தேதி, ஆலோசனை கூட்டம் ஒன்றில் பங்கேற்க வெள்ளை மாளிகைக்கு வருகை தரும்படி அழைத்து உள்ளார்.
கடந்த பிப்ரவரியில் இருந்து இந்த விவகாரம் பற்றி இரு தலைவர்களும் அமர்ந்து ஆலோசனை மேற்கொள்ளவில்லை. இதேபோன்று, ஜனநாயக கட்சியின் செனட் தலைவரான ஹக்கீம் ஜெப்ரீஸ், செனட்டின் பெரும்பான்மை தலைவர் சக் ஸ்கூமர் மற்றும் குடியரசு கட்சியின் மிட்ச் மெக்கான்னல் ஆகியோரையும் சந்திப்பதற்கான அழைப்பை அதிபர் பைடன் விடுத்து உள்ளார்.