ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்
|இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்,
இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே தொடங்கிய போரில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இதனை எதிர்த்து அமெரிக்க ராணுவத்தின் போர் கப்பல்கள் செங்கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டுக்குப் பிறகு ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.
முன்னதாக எங்கள் குழுவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹவுதியின் தலைவர் நேற்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.