< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு: 1,000 விமானங்கள் ரத்து
உலக செய்திகள்

அமெரிக்காவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு: 1,000 விமானங்கள் ரத்து

தினத்தந்தி
|
15 Feb 2024 7:49 AM IST

பயங்கர பனிப்பொழிவு காரணமாக வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது.

நியூயார்க்,

அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்தநிலையில் நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி வலுப்பெற்றது. இதனால் முக்கிய நகரங்களான நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்றவற்றில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.இந்த பயங்கர பனிப்பொழிவு காரணமாக வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது. இதனால் முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல் சாலைகளிலும், ரெயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைகுவியல் போல் குவிந்ததால் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக மாசாசூட்சின் பாஸ்டன் நகரில் 20 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பனிப்புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பென்சில்வேனியா மாகாணத்தில் நிலவிய கடுமையான பனிப்புயல் காரணமாக மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமானோர் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள் ரத்தாகின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

பயங்கர பனிப்புயல் காரணமாக மாகாணங்களின் பல்வேறு இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில் வரும் நாட்களில் பனிப்பொழிவு நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவதற்கு நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் தடை விதித்துள்ளன.

மேலும் செய்திகள்