சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது துருக்கி வான்தாக்குதல்
|சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது துருக்கி ராணுவம் வான்தாக்குதலை நடத்தியது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
டமாஸ்கஸ்,
சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தனிநாடு கோரும் இவர்கள் துருக்கி மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். எனவே துருக்கி அரசாங்கம் இவர்களை பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது.
இந்த நிலையில் துருக்கி நாடாளுமன்றம் அருகே கடந்த 1-ந்தேதி தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்த முயன்ற மற்றொரு நபரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ராணுவத்தினர் நடத்திய விசாரணையில், சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதற்கு பதிலடியாக அவர்களது முகாம்கள் மீது துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி சிரியாவில் உள்ள தால் ரிபாட், ஜசீரா, டெரிக் ஆகிய இடங்களில் உள்ள 30 முகாம்களை குறிவைத்து துருக்கி ராணுவம் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது.
இதில் 3 போர் விமானங்கள் மற்றும் 21 டிரோன்கள் மூலம் குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அப்போது சிரியாவுக்கு சொந்தமான 2 மின் நிலையங்கள் மற்றும் ஒரு நீர் நிலையம் போன்றவை சேதமடைந்தன.
மேலும் இந்த தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னர் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளுக்கு அருகில் சில டிரோன்கள் பறந்தன. தற்காப்பு நடவடிக்கையாக அமெரிக்க ராணுவ வீரர்கள் அதனை சுட்டு வீழ்த்தினர்.
பின்னர் இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் துருக்கி ராணுவ மந்திரி யாசர் குலேரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்த தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்படவில்லை என யாசர் தெரிவித்தார். மேலும் அமெரிக்க படைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதை அவர்கள் இருவரும் உறுதிப்படுத்தினர்.