கப்பல்களை ஈரான் சிறைபிடிப்பதை தடுக்க ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா
|பாரசீக வளைகுடா கடல் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்கா - ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதனிடையே, வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது. கச்சா எண்ணெய் கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டுவரப்படுகின்றன.
இதனிடையே, பாரசீக வளைகுடா கடல் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி என்ற பகுதி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் - ஈரானை பிரிக்கும் கடல் பகுதியாக இந்த ஜலசந்தி உள்ளது. வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கிக்கொண்டு கப்பல்கள் இந்த வழியாகத்தான் பிற நாடுகளுக்கு செல்ல முடியும்.
அதேவேளை, இந்த வழியே செல்லும் அமெரிக்க எண்ணெய் கப்பல்களை ஈரான் கடற்படை சிறைபிடிப்பது வழக்கமாக உள்ளது. அவ்வாறு கப்பல்கள் சிறைபிடிக்கபடுவதால் அமெரிக்கா - ஈரான் இடையேயான உறவில் தொடர்ந்து விரிசல் நீடித்து வருகிறது. அதனால், தங்கள் நாட்டின் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க அமெரிக்கா போர் கப்பல்களையும் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தி வருகிறது.
இந்நிலையில், கப்பல்களை ஈரான் சிறைபிடிப்பதை தடுக்க ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் விமானங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த 2 அமெரிக்க எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதனை தொடர்ந்து இந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிக்கு எப்-16 அதிநவீன போர் விமானங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த போர் விமானங்கள் அமெரிக்க எண்ணெய் கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்ய அனுப்பப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.