அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் இந்திய வம்சாவளி பெண் நீதிபதி ஆனார்; செனட் சபை ஒப்புதல்
|அமெரிக்க நாட்டில் உள்ள 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் ரூபாலி எச்.தேசாய் நியமிக்கப்பட்டார்.
வாஷிங்டன்,
அந்த நாட்டின் சட்டப்படி இதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இது தொடர்பான ஓட்டெடுப்பு செனட் சபையில் நடந்து முடிந்துள்ளது. இதில் அவரது நியமனத்துக்கு ஆதரவாக 67 பேரும், எதிராக 29 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையோர் ஆதரவாக ஓட்டு போட்டதால், ரூபாலி எச்.தேசாய் அப்பீல் கோர்ட்டு (கலிபோர்னியாவில் சான்பிரான்சிஸ்கோ நகரில்) நீதிபதியாக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவர் கனடாவில் டொராண்டாவில் பிறந்தவர். அமெரிக்காவின் அரிசோனா ஜேம்ஸ் இ ரோஜர்ஸ் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து தேறினார். தற்போது நீதிபதியாகியுள்ள 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதி மேரி ஸ்ரோடரின் சட்ட குமாஸ்தாவாக 2005, 2006 ஆண்டுகளில் பணியாற்றினார். பின்னர் வக்கீல் தொழில் செய்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி இவரை 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்தார். அதற்கு இப்போது நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் தந்துள்ளது.
இந்த கோர்ட்டில் தெற்காசியாவில் இருந்து முதன் முதலாக இவர்தான் நீதிபதியாகி இருக்கிறார் என்பது சிறப்பு.