நேட்டோவில் இணையும் பின்லாந்து, சுவீடன்: அமெரிக்க செனட் சபை ஒப்புதல்
|நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
வாஷிங்டன்,
உக்ரைன் நாட்டில் ரஷியா திடீரென ஊடுருவி போரை துவங்கியதைத் தொடர்ந்து, தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என்று கருதிய பின்லாந்தும், சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்தன.
ஆனால், அவை நேட்டோ அமைப்பில் இணையவேண்டுமானால், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளின் நாடாளுமன்றங்கள், அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு அந்நாடுகளுக்குக் கிடைக்கும்.
அதாவது நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால், 'ஒரு உறுப்பு நாட்டின் மீதான தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலுக்கு சமம்' என்ற கொள்கையின்படி, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்படும்.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் வகையில் அட்லாண்டிக் கடல்கடந்த கூட்டணியின் விரிவாக்கத்தை வலுவாக ஆதரித்து, நேட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தனது டுவிட்டரில், "நேட்டோவில் இணைவதன் மூலம், பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இது முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இரண்டு நாடுகளின் இணைப்புக்கு ஆதரவாக செனட் சபையில் 95 க்கு 1 என்ற கணக்கில் வாக்களித்தது, இதுவரை 30 நேட்டோ நாடுகளில் அமெரிக்கா 23 வது இடத்தைப் பிடித்தது, இதற்கு முன்னதாக இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்திருந்தது.