< Back
உலக செய்திகள்
அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
உலக செய்திகள்

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

தினத்தந்தி
|
15 Jan 2024 8:18 PM GMT

ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சனா,

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது.

இதனிடையே, இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சமீபத்தில் அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை. கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதை அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளது.

அதேவேளை, காசா முனையில் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்வரை இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் மற்றும் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்