இணைய தேடலில் ஆதிக்கம் செலுத்த ஆண்டுக்கு ரூ.82,955 கோடி செலவிடுகிறது கூகுள்- அமெரிக்கா குற்றச்சாட்டு
|கூகுள் தனது ஏகபோகத்தை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்தது என்பதை கண்காணிப்போம் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
வாஷிங்டன்:
இணையத்தில் தகவல்களை தேடுவோருக்கு சர்ச் என்ஜின் எனப்படும் தேடுபொறி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வசதியை பல மென்பொருள் நிறுவனங்கள் வழங்கினாலும், ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் சட்ட விதிகளை மீறியதாக கூகுள் மீது வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.
அப்போது ஆன்லைன் தேடலில் ஏகபோக உரிமையை நிலைநாட்டி ஆதிக்கம் செலுத்துவதற்காக ஆப்பிள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.82,955 கோடியை கூகுள் செலுத்துவதாக அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
"இந்த வழக்கானது இணையத்தின் எதிர்காலத்தைப் பற்றியது என்றும், இணைய தேடலில் கூகுள் எப்போதாவது அர்த்தமுள்ள போட்டியை எதிர்கொள்ளுமா என்பது பற்றியது என்றும், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கென்னத் டின்ஸர் தெரிவித்தார். கூகுள் தனது ஏகபோகத்தை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்தது என்பதை கண்காணிப்போம் என்றும் அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டை கூகுள் மறுத்துள்ளது. கூகுள் பல ஆண்டுகளாக தேடுபொறியை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது. மனுதாரர்கள் இந்த உண்மையை மறைக்க பார்க்கிறார்கள் என்று கூகுள் நிறுவன வழக்கறிஞர் ஜான் ஸ்மித்லின் வாதாடினார்.