< Back
உலக செய்திகள்
உக்ரைன் போரில் டிசம்பர் மாதம் முதல் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா கணிப்பு
உலக செய்திகள்

உக்ரைன் போரில் டிசம்பர் மாதம் முதல் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா கணிப்பு

தினத்தந்தி
|
2 May 2023 4:23 AM IST

உக்ரைன் போர் டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கணித்துள்ளது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 433-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கணித்துள்ளது. அதேவேளை, போர் தொடங்கியது முதல் கடந்த நவம்பர் மாதம் வரை 1 லட்சம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்