< Back
உலக செய்திகள்
அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி - அமெரிக்கா ஆதரவு

கோப்புப்படம்

உலக செய்திகள்

அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி - அமெரிக்கா ஆதரவு

தினத்தந்தி
|
6 April 2023 4:51 AM IST

அருணாசலபிரதேச விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது.

வாஷிங்டன்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அருணாசல பிரதேசத்தை எப்போதும் ஜாங்னான் என்று குறிப்பிடுகிறது. ஆனால் இந்தியா அதை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

இந்த நிலையில், அருணாசல பிரதேசத்தை உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக அங்குள்ள 11 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியது. சீனாவின் சிவில் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் 2 நிலப்பகுதிகள், 2 குடியிருப்பு பகுதிகள் 5 மலைச்சிகரங்கள், 2 ஆறுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இத்தகைய அடவாடி செயல்களை திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் கூறியுள்ளது. இந்த நிலையில் அருணாசலபிரதேச விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "அமெரிக்கா, அருணாசலபிரதேசத்தை நீண்ட காலமாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்துள்ளது. மேலும் உள்ளாட்சிகளை மறுபெயரிடுவதன் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சிகளையும் நாங்கள் கடுமையாக எதிர்கிறோம்" என்றார்.

மேலும் செய்திகள்