< Back
உலக செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல்; பின்வாங்கும் நிக்கி ஹாலே - குடியரசு கட்சி வேட்பாளராகும் வாய்ப்பை பெறுவாரா டிரம்ப்?
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்; பின்வாங்கும் நிக்கி ஹாலே - குடியரசு கட்சி வேட்பாளராகும் வாய்ப்பை பெறுவாரா டிரம்ப்?

தினத்தந்தி
|
6 March 2024 7:46 PM IST

குடியரசு கட்சி வேட்பாளருக்கான பிரச்சாரத்தை கைவிட நிக்கி ஹாலே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதை முடிவு செய்வதற்காக அக்கட்சி சார்பில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்குகளை பெரும் நபர் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

இதில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே அதிபராக இருந்த டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு அதிகமாக இருந்த போதிலும், நிக்கி ஹாலே தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார்.

தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னரும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹேலே, நாட்டின் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் பாரம்பரிய பழமைவாதம் இடம்பெற வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்வைத்தார்.

முன்னதாக அவர் வெர்மாண்ட் மற்றும் வாஷிங்டனில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில், நிக்கி ஹாலே தனது பிரச்சாரத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு டிரம்ப்புக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்