ஈராக்கில் அமெரிக்க விமானப்படை தளம் மீது ராக்கெட் தாக்குதல்
|ஈராக்கில் அமெரிக்க விமானப்படை தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாக்தாத்,
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதையடுத்து, தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற வலியுறுத்தி ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அமெரிக்கா அதனை ஏற்க மறுத்துவிட்டது. எனவே அமெரிக்க படைவீரர்களை ஈராக்கில் இருந்து விரட்டியடிக்கும் நோக்கில் ஈராக்கில் அவர்கள் தங்கியிருக்கும் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஈராக்கின் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் அமெரிக்க ராணுவ வல்லுநர்கள் தங்கியுள்ள விமானப்படை தளம் மீது நேற்று பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அடுத்தடுத்து 3 ராக்கெட்டுகள் விமானப்படை தளத்துக்கு மிக அருகில் விழுந்து வெடித்து சிதறின. எனினும் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டசவமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.