ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
|சனா,
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது.
இதனிடையே, இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சமீபத்தில் அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த தாக்குதலையடுத்து அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் ஏமனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குத்ல நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு விவரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.