< Back
உலக செய்திகள்
சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதி!
உலக செய்திகள்

சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதி!

தினத்தந்தி
|
2 Oct 2022 7:24 AM IST

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டன.

வாஷிங்டன்,

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவர்த்தை அமெரிக்காவில் பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகளை வரவேற்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறுகையில், தைவான் ஜலசந்தியில் சீனாவின் அதிகரித்து வரும் ஆக்ரோஷமான மற்றும் மிரட்டும் நடத்தை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய மந்திரி ரிச்சர்ட் மார்லஸ் கூறுகையில், சீனா தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை நாம் இதுவரை கண்டிராத வகையில் வடிவமைக்க முயல்கிறது என்று தெரிவித்தார். மேலும், சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதிமொழி எடுத்துக்கொண்டன.

பசிபிக் தீவு நாடுகளில் தனது இராஜாங்க உறவுகளை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தைவான் ஜலசந்தி உட்பட ஆசியா முழுவதும் அமெரிக்கா அச்சமோ தயக்கமோ இல்லாமல் செயல்படும் என்று தெரிவித்தார்.

இப்பகுதியில் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க அமெரிக்கா தூதரக ரீதியில் தாக்குதலை நடத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் பசிபிக் தீவு நாடுகளுக்கு 810 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்