அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சி
|அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியநாடுகள் இணைந்து முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.
சியோல்,
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து சர்வதேச கிழக்கு கடல் பரப்பில் முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர்ச்சியாக பல ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் சூழலில், வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும் கூட்டுப்போர் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதனை முன்னிட்டு ஜப்பான் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.
நடுத்தர அல்லது நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய வடகொரியாவின் ஏவுகணை சோதனையான்து, ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில் வந்து விழ கூடும் என்றும் அதனால், அந்நகரில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படியும் ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
எனினும், அந்த ஏவுகணை வடகொரியாவுக்கு கிழக்கே கடலில் விழுந்து இருக்க கூடும் என ஜப்பானின் கடலோர காவல் படை பின்னர் தெரிவித்தது.
இந்த சூழலில், வடகொரிய ரோந்து படகு ஒன்று குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட தனது கடல் எல்லை பகுதியை கடந்து தென்கொரிய எல்லைக்குள் நேற்று அத்துமீறி நுழைந்து உள்ளது என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, தென்கொரிய ராணுவம் துப்பாக்கியால் சுட்டு வடகொரியாவுக்கு எச்சரிக்கை செய்து உள்ளது. சமீப வாரங்களாக வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகள், கொரிய பகுதியில் பதற்றம் அதிரிக்கும் வகையில் அமைந்து உள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து சர்வதேச கிழக்கு கடல் பரப்பில் முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என தென்கொரிய கடற்படை தெரிவித்து உள்ளது.
இந்த முத்தரப்பு ஒத்துழைப்பானது எங்களுடைய பகிரப்பட்ட மதிப்புகளை பிரதிபலிப்பதுடன், மண்டல நிலைத்தன்மைக்கு சவாலாக இருப்பவர்களுக்கு எதிரான தீர்மானத்துடன் செயல்பட உதவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.