< Back
உலக செய்திகள்
பிராந்திய அமைதியை சீர்குலைப்பதில் அமெரிக்கா பெரும் பங்காற்றி வருகிறது - சீனா குற்றச்சாட்டு

Image Courtesy : AFP

உலக செய்திகள்

பிராந்திய அமைதியை சீர்குலைப்பதில் அமெரிக்கா பெரும் பங்காற்றி வருகிறது - சீனா குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM GMT

பிராந்திய அமைதியை சீர்குலைப்பதில் அமெரிக்கா பெரும் பங்காற்றி வருவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

பீஜிங்,

அமெரிக்காவில் ராணுவ தலைமையகமான பென்டகன் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அண்டை நாடுகள் உடனான சகோதரத்துவத்தில் சீனா மிகவும் பின்தங்கி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் ஆயுத குவிப்பு, ராணுவத்தின் ஆள்சேர்க்கையை அதிகரித்து வருவதாகவும், அணு ஆயுதங்கள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருவதாகவும், இதனால் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் அபாயகரமான நாடாக சீனா உருவாகி வருவதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீன ராணுவத்தின் உயர் அதிகாரியான வூ கியான் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். பத்திரிகையாளர்கள் உடனான சந்திப்பில் வூ கியான் அமெரிக்க ஆய்வறிக்கையை தாக்கி பேசினார். அவர் கூறுகையில், "இந்த அறிக்கைக்கு நாங்கள் எங்கள் கடுமையான அதிருப்தியையும், உறுதியான எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்" என்றார். இந்த அறிக்கை, "இல்லாத சீன ராணுவ அச்சுறுத்தல் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம்" என்று விவரித்தார்.

மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குதல், தைவான் உடனான ராணுவ ஒப்பந்தம் ஆகியவற்றால் பிராந்திய அமைதியை சீர்குலைப்பதில் அமெரிக்கா பெரும் பங்காற்றி வருவதாகவும் அவர் கடுமையாக சாடினார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சீன வெளியுறவு மந்திரி வாங் இ அமெரிக்காவுக்கு செல்ல உள்ள நிலையில் சீனாவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்