இந்தியா-ரஷியா உறவு குறித்து அமெரிக்கா கவலை
|ரஷியாவுடன் இந்தியா நட்புறவு பேணுவதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது.
மாஸ்கோ,
இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார். ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கியதற்கு பிறகு மோடி ரஷியா சென்றிருப்பது இது முதல் முறையாகும். ரஷியாவுடன் இந்தியா நட்புறவு பேணுவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் மோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை ஒன்றை முன்வைத்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இது குறித்து கூறியதாவது:-
இந்தியா, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடு ஆகும். அவர்களுடன் நாங்கள் முழுமையான மற்றும் வெளிப்படையான உரையாடலில் ஈடுபடுகிறோம். ரஷியாவுடனான அவர்களின் உறவை பற்றிய எங்கள் கவலைகளும் இதில் அடங்கும். (ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்ததைப் போலவே மோடி-புதின் சந்திப்பை நாங்கள் பார்க்கிறோம். இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று நாங்கள் நினைக்கிறோம். உக்ரைன் போர் தொடர்பான எந்தவொரு தீர்மானமும் ஐ.நா சாசனம் மற்றும் உக்ரைனின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை ரஷியாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். நாங்கள் ஏற்கனவே கூறியது போல், ரஷியாவுடனான உறவைப் பற்றிய எங்கள் கவலைகளை இந்தியாவிடம் நேரடியாகத் தெளிவுபடுத்தினோம். அதை தொடர்ந்து செய்வோம்.
இவ்வாறு மேத்யூ மில்லர் கூறினார்.