சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் அதிபருடன் அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு
|சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திப்பதற்காக தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
வாஷிங்டன்,
தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக இணைக்கும் முனைப்பில் சீனா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சமீப காலமாக இருநாடுகளுக்கும் இடையேயான போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளன. ஆனால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது நாட்டின் முக்கிய தலைவர்களை அங்கு அனுப்பியது. அதன்படி அமெரிக்க நாடாளுமன்றத்தின் அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து தைவான் கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டது.
இந்த நிலையில் தற்போதைய சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திப்பதற்காக தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சந்திப்பு நடைபெறக்கூடாது என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை மீறி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது தைவான் மீதான சீனாவின் அச்சுறுத்தலை ஒப்புக்கொண்டதாகவும், தைவானுக்கு தனது முழு ஆதரவை அமெரிக்கா வழங்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது. அமெரிக்காவின் இந்த செயலானது சீனாவுக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டி உள்ளது.