< Back
உலக செய்திகள்
ராணுவ தொழில் நுட்ப திருட்டில் சீனா ஈடுபடும் என அமெரிக்கா அச்சம்:  அறிக்கை தகவல்
உலக செய்திகள்

ராணுவ தொழில் நுட்ப திருட்டில் சீனா ஈடுபடும் என அமெரிக்கா அச்சம்: அறிக்கை தகவல்

தினத்தந்தி
|
28 March 2023 9:40 PM IST

அழகிய உளவாளிகள், லஞ்சம் உதவியுடன் ராணுவ தொழில் நுட்ப திருட்டில் சீனா ஈடுபடும் என அமெரிக்கா அச்சம் கொண்டு உள்ளது என்று அறிக்கை தெரிவிக்கின்றது.

பீஜிங்,

சீனாவின் அதிபராக 3-வது முறையாக ஜீ ஜின்பிங் பொறுப்பேற்று கொண்டபின், அவர் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டில் பேசும்போது, பாதுகாப்பு துறையில் நவீனத்துவம் மற்றும் சீன படையை ஸ்டீல் பெருஞ்சுவர் போன்று கட்டமைக்க வேண்டும் என பேசினார்.

எனினும், அமெரிக்காவின் பாதுகாப்பு நிபுணர்கள், ராணுவ நவீனத்துவத்திற்கு சீனா, உளவு வேலைகள் மற்றும் மேற்கத்திய தொழில் நுட்ப திருட்டில் ஈடுபடும் என கூறியுள்ளனர். ராணுவம் மற்றும் குடிமக்கள் ஒருங்கிணைப்புடன் இவை நடைபெறும் என்றும் கூறுகின்றனர்.

இதுபற்றி அமெரிக்க விமான படையின் ஓய்வு பெற்ற கர்னல் டெர்ரி தாம்சன், வாய்ஸ் ஆப் அமெரிக்காவுக்கு அளித்த பேட்டியை தி சிங்கப்பூர் போஸ்ட் செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றில் வெளியிட்டு உள்ளது.

அதில், சீனா பெரும்பாலும் என்ஜின் மற்றும் இயந்திர நடைமுறை தொழில் நுட்பங்களை திருடுகிறது என அவர் கூறியுள்ளார்.

ராணுவ ஆயுதங்கள் பற்றிய முக்கிய தகவல்களை பெறுவதற்காக உளவாளிகள், அழகிகளை பயன்படுத்துவது, அமெரிக்க ஒப்பந்ததாரர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து ஈர்ப்பது, இணையதள செயல்பாடுகளின் வழியே உயர்தொழில் நுட்பங்களை திருடுவது போன்ற வேலைகளில் சீன உளவு பணி அமைகிறது.

மேற்கு பசிபிக் பகுதியில் அமெரிக்க படைகளை அதிக அளவில் குவிக்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க தொழில் நுட்பங்களை பெறுவதில் இருந்து தடுக்கும் வகையில் சீன ராணுவத்தின் தொடர்பை துண்டிக்க வேண்டி உள்ளது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆதிக்க சக்தியாக உருமாற சீனா விரும்புகிறது. அடுத்த சில தசாப்தங்களுக்கு அதன் வளர்ச்சிக்கான இலக்காக அது இருக்கும். அவர்களை நாம் சரியான தருணத்தில் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தாம்சன் கூறியுள்ளார் என தி சிங்கப்பூர் போஸ்ட் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் எப்-22 போர் விமானம் போன்று, 5-ம் தலைமுறை போர் விமானம் ஒன்றை சீனா வைத்து உள்ளது. இது தொடர்ச்சியான அறிவுசார் சொத்துகளை திருடுவதன் வழியே நடந்து உள்ளது என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

உளவு வேலை இன்றி, சீனாவின் ஜே-20 போர் விமானம், அமெரிக்க விமானத்துடன் போட்டியிட முடியாது. ஏனெனில் அது தற்போது நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. அதுவே குறிப்பிடத்தக்க விசயம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்