சீன வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெறாது: குவின் வாங் கடுமையாக விமர்சனம்
|உக்ரைன் விவகாரத்தில், அமைதியாக, காரணத்துடன் கூடிய பேச்சுவார்த்தை தேவையான ஒன்றாக உள்ளது என குவின் வாங் கூறியுள்ளார்.
பீஜிங்,
உக்ரைனில் நடந்து வரும் ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷிய ஆதரவு நாடுகளையும் எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் சமீபத்தில், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர்.
இந்த சூழலில் சமீபத்தில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் அளித்த பேட்டியில், உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஆனால், சீனா அப்படி செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்கும் என்றே நான் நேர்மறையாக எண்ணுகிறேன் என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய நாடுகளில் மிக பெரிய பொருளாதார நாடாக உள்ள ஜெர்மனி, சமீப ஆண்டுகளாக சீனாவுடன் தனிப்பட்ட முறையில் மிக பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் இருந்து வருகிறது. எனினும், உக்ரைன் விவகாரத்தில் சீனாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசி உள்ளது.
சீனாவில் வெளியுறவு மந்திரியாக குவின் கேங் பதவியேற்ற பின்னர், முதன்முறையாக வருடாந்திர பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், சீனா தனது நாட்டின் முக்கிய நலன்களை பாதுகாக்கும் என கூறியதுடன், பிற நாடுகளின் ஆதிக்கம் எதிர்க்கப்படும் என கூறினார். ஒரு சில கூட்டணி நாடுகளின் அரசியல் மற்றும் மற்றவர்களின் ஒத்திசைவை பெறாமல் விதிக்கப்படும் ஒருசார்பு தடைகளை நாங்கள் எதிர்க்கிறோம் என்று அவர் கூறினார்.
சீனா மற்றும் ரஷியா இரு நாடுகளும் சர்வதேச உறவுகளுக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. அவர்களது நெருங்கிய இருதரப்பு உறவுகளை பனிப்போர் அடிப்படையில் பார்ப்பது சரியானது அல்ல என்றும் கூறியுள்ளார்.
சீனாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கூறிய அவர், பழைய நண்பர்களுடனான உறவை மேம்படுத்தி, வலுப்படுத்தும் பணியை சீனா தொடரும் என கூறியுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில், ஏதோ ஒரு மறைமுக கரம் பின்னால் இருந்து நெருக்கடியை தீவிரப்படுத்துவது போன்று தோன்றுகிறது. அமைதியாக, காரணத்துடன் கூடிய பேச்சுவார்த்தை தேவையான ஒன்றாக உள்ளது என குவின் கூறியுள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தைக்கான நடைமுறை உடனடியாக நடத்தப்படுவதுடன், தொடர்புடைய அனைத்து நாடுகளும் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று, சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெறாது என கடுமையாக விமர்சித்து உள்ளார்.