அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா இக்கட்டான சூழலை உருவாக்குகிறது - ஈரான் குற்றச்சாட்டு
|அமெரிக்க அரசின் அறிக்கைகளும், அதன் செயல்பாடுகளும் முரண்பாடாக உள்ளதாக ஈரான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
டெஹ்ரான்,
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. இதையடுத்து அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஈரான் ஒவ்வொன்றாக புறக்கணித்து வந்தது. அதே சமயம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்ததால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது.
இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய இக்கட்டான நிலைக்கு, அமெரிக்காவின் தவறான நடத்தையே முக்கிய காரணம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் அரசு பேச்சுவார்த்தைகள் மூலம் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற விரும்புகிறது எனவும், ஆனால் அமெரிக்க அரசின் அறிக்கைகளும், அதன் செயல்பாடுகளும் முரண்பாடாக உள்ளன என்றும் அவர் கூறினார். இது ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
மற்ற தரப்பினரிடையே பலதரப்பு தீர்வுகள் குறித்த சந்தேகங்களை உருவாக்கி உள்ளதோடு, பல சிக்கலான சர்வதேச பிரச்சினைகளுக்கு அமெரிக்க அரசின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று அவர் விமர்சித்தார். அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஈரான் ஒத்துழைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.