< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை - அமெரிக்கா கண்டனம்

Image Courtesy: AFP

உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை - அமெரிக்கா கண்டனம்

தினத்தந்தி
|
21 Dec 2022 8:38 AM IST

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது.

இந்த மோசமான முடிவுவானது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தலிபான்கள் தலைமையின் எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சியாகும்.

ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் பாதியளவு உள்ள பெண்களின் கல்வியை தடுத்து நிறுத்தும் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டின் விளைவாக, தலிபான்கள் சர்வதேச சமூகத்திலிருந்து மேலும் விலகி அவர்கள் விரும்பும் சட்டபூர்வமான தன்மை மறுக்கப்படும்.

இந்தப் பிரச்சினையில் எங்களின் கூட்டு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது. ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்கும் எங்களின் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்