மணிப்பூர் கொடூரமான பாலியல் வன்கொடுமை வீடியோ: அமெரிக்கா கண்டனம்
|மணிப்பூரின் கொடூரமான பாலியல் வன்கொடுமை வீடியோவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்
மணிப்பூரில் மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது:-
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடத்தபட்ட வன்முறை மிருகத்தனமானது.மிகவும் பயங்கரமானது.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அமெரிக்கா தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.
மணிப்பூர் வன்முறைக்கு அமைதியான தீர்வை அமெரிக்கா விரும்புகிறது. அனைத்து குழுக்கள், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் மனிதாபிமான தேவைகளுக்கு பதிலளிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது என்று தெரிவித்து உள்ளார்.