ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா; ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தணிந்தது
|அமெரிக்காவின் ராணுவ உதவியால் இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களை கட்டமைக்க உள்ளது என்று இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டை கூறியுள்ளன.
ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது. நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும் மற்றும் குடிமக்களின் நன்மைக்காகவும் என்று கூறியுள்ளது. இந்த சூழலில், ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த ராணுவ தளத்தின் மீது இரவோடு இரவாக இஸ்ரேல், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
இந்த தளத்தில், ராணுவ வீரர்கள் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படையினர் ஆகியோர் தங்கியுள்ளனர். ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே, போர் மூள்வதற்கான சூழல் காணப்படும் சூழலில், இது 3-வது உலக போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' (Iron Dome) வான் பாதுகாப்பு அமைப்பு உள்பட, இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனை வரவேற்றுள்ளார். அமெரிக்காவின் இந்த ராணுவ உதவியால் தற்போது இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.