ஆப்பிரிக்காவுக்கு மனிதநேய அடிப்படையில் ரூ.4719.47 கோடி நிதியுதவி; அமெரிக்கா அறிவிப்பு
|ஆப்பிரிக்காவுக்கு மனிதநேய அடிப்படையில் ரூ.4719.47 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்படும் என அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
வாஷிங்டன்,
உலக அளவில் 8.9 கோடிக்கும் மேற்பட்டோர் கடந்த 2021ம் ஆண்டில் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த வரலாற்று பதிவை, உக்ரைன் போர் அதிகப்படுத்தி உள்ளது. அகதிகள் மற்றும் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையானது நடப்பு ஆண்டில் 10 கோடியை கடந்து உள்ளது என ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதரகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், ஆப்பிரிக்காவுக்கு மனிதநேய அடிப்படையில் ரூ.4719.47 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்படும் என அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி மற்றும் வெளியுறவு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த நிதியுதவியானது, அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள், நாடற்ற நபர்கள், கட்டாயத்தின் பேரில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் ஆப்பிரிக்கா முழுவதுமுள்ள துன்புறுத்தப்பட்ட மக்களுக்கான வாழ்க்கை பாதுகாப்புக்கான ஆதரவை வழங்கும் வகையில் இருக்கும்.
இந்த நிதியுதவி, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை ஆதரிக்கும் வகையிலும் அமையும்.
உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டுள்ள தாக்குதலால் ஏற்பட்ட விலைவாசி உயர்வால், அந்நாட்டின் இறக்குமதியை நம்பியுள்ள பல்வேறு நாடுகளும் அதிர்ச்சியில் தள்ளப்பட்டன. இதுபோன்ற விசயங்களை கவனத்தில் கொண்டு, சர்வதேச கவனம் குறைந்து போயுள்ள உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு மனிதநேய நெருக்கடி சார்ந்த உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அவற்றில் காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தெற்று சூடானில் இருந்து நடப்பு ஆண்டில் உகாண்டாவுக்கு அகதிகளாக 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து உள்ளனர். இந்த வருகை அதிகரித்து வரும் சூழலில் நிதியுதவி அளிக்கும் முடிவை அமெரிக்கா அறிவித்து இருப்பது ஆறுதல் ஏற்படுத்தி உள்ளது.